×

மும்பையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.164 கோடி பறிக்க முயற்சித்த கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது..!!

மும்பை: மும்பையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.164 கோடி பறிக்க முயற்சித்த கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.164 கோடி பறிக்க முயற்சி

மும்பையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.164 கோடி பறிக்க முயற்சித்த கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையைச் சேர்ந்த ஓம்கார் என்ற கட்டுமான நிறுவன அதிபரை தொடர்புகொண்ட ஹிரேன் ரமேஷ் பகத் என்பவர் அமலாக்கத்துறை அதிகாரி எனக்கூறி மிரட்டல் விடுத்துள்ளார். ஓம்கார் கட்டுமான நிறுவன அதிபருக்கும் தனுகா நிறுவன அதிபருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. ஓம்கார் கட்டுமான நிறுவனம் மீது தனுகா கட்டுமான அதிபர் தனுகா பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். மும்பை பாந்த்ராவில் அம்பேத்கர் நகர் புனரமைப்பு பணி தனுகா நிறுவனத்திடம் வழங்கப்பட்டிருந்தது. புனரமைப்பு பணியை தாமதப்படுத்தியதால் ஒப்பந்தத்தை தனுகா நிறுவனத்திடம் இருந்து ஓம்காருக்கு மாற்றியதால் பிரச்சனை ஏற்பட்டது.

ED அதிகாரிகளாக நடித்த 6 பேர் கைது

போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருப்பதாகவும் வழக்கில் இருந்து தப்ப ரூ.164 கோடி தருமாறு மிரட்டல் விடுத்தனர். மிரட்டலுக்கு பயந்து ரூ.25 லட்சம் பணம் கொடுத்த ஓம்கார், குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். மும்பை குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் அமலாக்கத்துறை அதிகாரிகளாக நடித்தது பணம் பறிக்கும் கும்பல் என தெரிய வந்தது. பணம் பறிக்கும் கும்பலின் மூளையாக செயல்பட்ட ஹிரேன் ரமேஷ் பகத் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைதுசெய்தனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.8 லட்சம் ரொக்கம், ஆவணங்கள் 21 பறிமுதல் செய்யப்பட்டது. அவினாஷ் துபே, ராஜேந்திர சிர்சாத், ராகேஷ் கேடியா, கல்பேஷ் போஸலே, அமய் சவேகர், ஹிரேன் ரமேஷ் பகத் கைது செய்யப்பட்டனர்.

பணம் பறிக்கும் கும்பலிடம் அமலாக்கத்துறையின் 200 வழக்கு ஆவணங்கள்

பணம் பறிக்கும் கும்பலிடம் இருந்து சிக்கிய ஆவணங்களில் அமலாக்கத்துறை விசாரிக்கும் 200 வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் இருந்ததால் அமலாக்கத்துறை விசாரிக்கும் 200 வழக்குகளின் ஆவணங்கள், கும்பலிடம் சென்றது எப்படி என்று மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமலாக்கத்துறை அதிகாரி மீதும் வழக்கு

அமலாக்கத்துறை அதிகாரிகளே ஆவணங்களை கொடுத்தார்களா என்பதை கண்டறியவும் போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் அடையாளம் தெரியாத அமலாக்கத்துறை அதிகாரி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவுசெய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தங்களிடமும் பணம் பறிக்கும் முயற்சி நடந்ததாக மும்பையைச் சேர்ந்த மேலும் பல தொழிலதிபர்கள் புகார் அளித்துள்ளனர்.

ED ஆவணங்கள் பணம் பறிக்கும் கும்பலுக்கு கிடைத்தது எப்படி?

இதுவரை யார், யாரிடம் அமலாக்கத்துறை பெயரில் பணம் பறிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ளது. பல ஆயிரம் கோடி மதிப்புள்ள மகாதேவ் செயலி மோசடி, டாபர் நிறுவன அமலாக்கத்துறை வழக்கு ஆவணங்களும் கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அமலாக்கத்துறை வழக்கில் சிக்கும் பெரும் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது தொடர்கிறதா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

பா.ஜ.க.வுக்காக ED பெயரில் பணம் பறிப்பா? -திரிணாமுல்

பா.ஜ.க.வுக்காக அமலாக்கத்துறை பெயரில் பணம் பறிப்பா? என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே கேள்வி எழுப்பியுள்ளார். மும்பை தொழிலதிபர்களிடம் ரூ.100 கோடிக்கு மேல் பணம் பறிக்க முயன்ற 6 பேர் கைதானதை சுட்டிக்காட்டி திரிணாமுல் கேள்வி எழுப்பியது.

பணம் பறிக்கும் நோக்கத்துடன் அமலாக்கத்துறை சோதனையா? – திரிணாமுல்

அமலாக்கத்துறை விசாரிக்கும் 200 வழக்குகளின் ரகசிய ஆவணங்கள், பணம் பறிக்கும் கும்பலிடம் சென்றது எப்படி? என திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. அமலாக்கத்துறையே ஆவணங்களை குற்றவாளிகளுக்கு கொடுத்ததா? என சாகேத் கோகலே எம்.பி கேள்வி எழுப்பினார். பணம் பறிப்பதற்காக குறிப்பிட்ட நிறுவனங்களை அமலாக்கத்துறை குறி வைக்கிறதா. குறி வைக்கப்பட்ட நிறுவனங்களின் கோப்புகளை பா.ஜ.க.வுக்காக பணம் திரட்டும் கும்பலிடம் அமலாக்கத்துறை கொடுக்கிறதா என்று கேள்வி.

 

The post மும்பையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.164 கோடி பறிக்க முயற்சித்த கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Dinakaran ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்